காதலின் காவலன் 2,3
அத்தியாயம் 2
மறுநாள் காலை பள்ளிக்கு தாவணி கட்டி கிளம்பி வெளியே வந்தாள் வள்ளி தன் சைக்கிளை எடுத்தவள் கிளம்ப போக அவள் அப்பத்தா சாப்பாடு டப்பாவை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார்
“வர வர என்ன நினைப்புல சுத்துறனே தெரியலை இந்தா சாப்பாடு ஒழுங்கா படிக்க தான் துப்பு இல்லை இதை கூடவா மறப்ப” என்று கூறிவிட்டு செல்ல போக “அப்பத்தா நான் இன்னைக்கு ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்கு விடுப்பு எடுத்துக்கிடவா” என்று அவள் கேட்க
“ஏன் போன மாசமே பத்து நாள் மட்டம் போட்டது போதாது விரைசா பள்ளிக்கூடத்துக்கு போ டி” என்று கத்தி விட்டு உள்ளே சென்றார்.
வள்ளி சோகமே உருவாய் பள்ளிக்கூடத்துக்கு செல்ல எவ்வளவு பொறுமையாக சைக்கிளை ஓட்டியும் பள்ளி வந்துவிட்டது அன்று முதல் வகுப்பே சரவணனுடையது தான் வள்ளிக்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது.
சரவணன் உள்ளே வர அனைவரும் எழுந்து நின்று “குட் மார்னிங் சார்” என்று ராகம் போட “உட்காருங்க உட்காருங்க” என்றான் மூங்கில் தடியை கையில் வைத்து கொண்டு நேற்று பெண் பார்கக அணிந்து வந்த அதே நீல நிற சட்டை கருப்பு நிற பேன்ட் டில் வந்திருந்தான் “இன்னைக்கு யாரெல்லாம் வீட்டு பாடம் முடிக்கல எழுந்து நில்லுங்க” என்று கூற இரண்டு மாணவர்கள் எழுந்து நிற்க ”அவ்வளவு தானா பொண்ணுங்கல்ல யாரும் இல்லை” என்று கேட்டுக் கொண்டே அவன் கடைசி இருக்கையை பார்க்க வள்ளி பயத்துடனே எழுந்து நின்றாள்.
“தெரியும் நீ ஒருத்தி தான் இருப்பன்னு” என்றவன் அவளை முறைத்து பார்த்து கொண்டே மூங்கில் தடியை கையில்
எடுத்தவன் “எல்லாரும் வெளியே வாங்க” என்று கூற அனைவரும் பயத்துடனே நிற்க மூங்கில் தடியால் மேஜை மீது ஓங்கி அடிக்க பயத்தில் அவள் கண்கள் படபடத்தது அனைவரும் வெளியே வந்தனர்.
மாணவர்கள் அனைவரும் அடி வாங்கி விட்டு வெளியே முட்டி போட வள்ளியின் முறை வர அனைவரும் அவளை தான் பார்த்தனர் சரவணன் கையில் பிரம்புடனே காத்திருக்க அவனை பார்த்து பயத்துடனே நடந்து வந்தவள் அவன் முன்னே வந்து கையை நீட்ட “வீட்டுப்பாடம் முடிக்கிறதை தவிர உனக்கு என்ன வேலை வீட்ல ம்ம்” என்று கேட்டுக் கொண்டே அவன் கம்பால் அடி வெளுக்க பெண்ணவள் “அப்பத்தா அப்பத்தா” என்று கதறி அழ ஆரம்பித்தாள்
“போ வெளியே போய் முட்டி போடு” என்று அவன் அடித்து விரட்ட வெளியே சென்று முட்டி போட்டாள் வள்ளி.
‘இந்த ஆள போய் எனக்கு கல்யாணம் பண்ணிக்க வைக்க பார்க்கிறாங்களே முருகா என்னை எப்படியாவது காப்பாத்து’ என்று மனதிலேயே வள்ளி பயத்துடனே வேண்டிக்கொள்ள அவரின் செவியை வந்தடைந்ததோ என்னவோ வள்ளியின் வீட்டு வாசலில் வந்து நின்றான் அவளின் முறைமாமன் ராஜதுரை.
“யோவ் யாருயா அது வீட்ல வெளிய வா யா” என்று கத்திக் கொண்டே தன் அடியாட்கள் நால்வருடன் அங்கே வந்து நின்றான் ராஜதுரை சத்தம் கேட்டு வள்ளியின் தந்தை கந்தனும் அவளின் அப்பத்தா முனியம்மாவும் வெளியே வந்தனர் முனியம்மாவின் மகள் வழி பேரன் தான் இந்த ராஜதுரை அவனின் தாய் அவன் தந்தை செய்த கொடுமை தாங்காமல் ராஜதுரை பிறந்த சில வருடங்களிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள இரு குடும்பத்துக்கும் இருந்த உறவு முற்றிலுமாக முறிந்து இருந்தது.
“யாருலே நீ எதுக்கு என் வூட்டு வாசல்ல நின்னு காது ஜவ்வு கிழிய கத்திட்டு இருக்கவன்” என்று முனியம்மா கிழவி கேட்க “உன் பேரன் கிழவி என்னையவே தெரியலையா உமக்கு அதெல்லாம் விடு
நான் இங்க ஒருத்தன் குத்து கல்லு கணக்கா இருக்கையில என்னைய விட்டுட்டு இன்னொருத்தனுக்கு என் அத்தை மவளை பரிசம் போடுறியே இது நியாயமா” என்று அவன் கேட்க.
“ஏன் உன் குடும்பத்துக்கு என் மவளை கட்டி பலி கொடுத்தது போதாது என் பேத்தியையும் பலி கொடுக்க சொல்றியா போடா போக்கத்தவனே ஊர்ல உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஏத்த ரெளடி பொம்பளை எவாளாவது கிடைப்பா அவளை கட்டிக்க வந்துட்டான் பொண்ணு கேட்டுக்கிட்டு” என்று கிழவி கத்தி கொண்டு இருக்க.
“அண்ணன் கிழிவி ரொம்ப பேசுது போட்றலாமா” என்று அவன் அடியாள் கேட்க “என்ன இருந்தாலும் அது என் பாட்டி டா போனா போகட்டும்” என்றான் ராஜதுரை
“நீங்க பொண்ணை முறையா கொடுத்தா கொடுங்க இல்லை தூக்கிட்டு போய் தான் தாலி கட்டுவேன்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் ராஜதுரை.
ராஜதுரை ஊரில் விசேஷ வீடுகளுக்கு பந்தல் மைக் செட் கட்டுவது போன்ற வேலைகளை செய்து வருகிறான் நல்ல வசதியானவன் தான் இருந்தாலும் தனக்கென்று தனி அடையாளத்துடன் வேலை பார்த்து கொண்டு இருக்கிறான்
ஊரில் சில பல ரெளடிசம் கட்டப்பஞ்சாயத்து போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்.
மாலை பள்ளி முடிந்து வள்ளி வீட்டிற்க்கு கிளம்ப எப்போதும் போல தாமரைக்கு காத்திருக்க அவள் வகுப்பில் விசாரிக்க அவள் இன்று வரவில்லை என்றனர்
என்ன என்று கேட்க அவள் வயதுக்கு வந்தது தெரிந்தது தாமரை அவளின் பங்காளி வழி உறவு என்பதால் ஆவலுடன் வீட்டுக்கு சென்ற வள்ளி உடை மாற்றி அவள் வீட்டுக்கு கிளம்பினாள் மறுநாள் காலை விசேஷத்துக்கு ஏற்பாடு செய்திருக்க ராஜதுரை தான் ஓலை பின்னிக் கொண்டு இருந்தான் தாமரைக்கும் முறை மாமன் இவன் தான்.
அவன் ஓலை பின்னி முடிக்க தாமரையை அழைத்து வந்து அமர வைத்தனர் ஊரே அவளை தான் பார்த்தது ராஜதுரை வள்ளியை பார்த்தான் வள்ளியோ அவனை பார்த்து பயந்து வீட்டுக்கு ஓடிவிட்டாள்
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது
தாமரையுடன் வள்ளியும் பள்ளாங்குழி ஆடிக் கொண்டு இருந்தாள்.
விசேஷத்துக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர் தாமரையையும் குளிக்க வைத்து அலங்காரம் செய்து மேடையில் அமர வைக்க ராஜதுரை தான் வந்து அவளுக்கு மாலை அணிவித்தான் தாமரை அவனை பார்த்து முறைத்து வைக்க ராஜதுரையும் பதிலுக்கு அவளை பார்த்து முறைத்தான் தாமரைக்கும் ராஜதுரைக்கும் எப்போதும் சரி வராது எலியும் பூனையுமாக தான் இருப்பர் அவன் அவளின் கன்னத்தில் சந்தனம் வைத்தவன் சந்தனம் வைக்கும் சாக்கில் யாருக்கும் தெரியாமல் அவள் கன்னத்தை நறுக்கென்று கிள்ளி வைக்க தாமரை வலி தாங்காமல் அவனை பார்த்து முறைத்தவள் அவனுக்கே தெரியாமல் அவன் கன்னத்தில் சந்தனத்தை வேண்டுமென்றே ஒட்டி விட அது தெரியாமல் அவன் திரும்பி நிற்க ஊரே அவனை வேடிக்கை பார்த்தது தங்களுக்குள் கிசுகிசுக்க தாமரை சாதாரணமாக அமர்ந்து கொண்டாள்.
அவள் பக்கத்தில் நின்ற வள்ளி “ஏய் என்ன டி பண்ற” என்று கேட்க “இரு அக்கா சும்மா விளையாட்டுக்கு தான” என்றாள் தாமரை
ராஜதுரை கன்னத்தில் இருந்த சந்தனத்தை பார்த்து ஊரே சிரிக்க ராஜதுரைக்கு ஒன்றும் புரியவில்லை “அண்ணே இங்க பாருங்க” என்று கண்ணாடியை எடுத்து வந்து அவன் அடியாட்களில் ஒருவன் காட்ட அவனுக்கு வந்ததே கோபம்
“எல்லாம் இந்த குட்டச்சியோட வேலையா தான் இருக்கும்” என்று பல்லைக் கடித்தான் அவன் தாமரையை தான் சொன்னான் அவன் அவளை பார்த்து முறைத்து வைக்க அவளோ அவனை கண்டுகொள்ளாமல் நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள்.
“என்ன பா ராஜதுரை உனக்கும் நலுங்கு வச்சிட்டாங்களா” என்று கேட்டுக் கொண்டே வயதான பெண்மணி ஒருவர் சிரித்து கொண்டே செல்ல இன்னொருவனோ
“நீ எப்ப யா ராஜதுரை வயசுக்கு வந்த” என்று கிண்டலடிக்க ராஜதுரைக்கு வந்ததே கோபம் அவரை பார்த்து முறைத்தான்.
நலுங்கு முடிந்து தாமரை அறையின் உள்ளே உடை மாற்றி வர அவளுக்கு முன்பே யாருக்கும் தெரியாமல் காத்திருந்தான் ராஜதுரை அவள் கதவடைத்து விட்டு திரும்பியது தான் தாமதம் மறு கணம் அவளின் கையை பிடித்து இழுக்க அவள் “அம்மா” என்று கத்தி கூச்சலிட போக அவளின் வாயை தன் கையால் ராஜதுரை இறுக மூடியவன்
“ஏன் டி கத்துற குட்டச்சி நான் தான்” என்க அவனை அன்னார்ந்து பார்த்து முறைத்தாள் பெண்ணவள்
“உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் முகத்துலையே சந்தனத்தை பூசி விடுவ” என்றவன் தன் கையில் இருந்த முழு சந்தனத்தையும் அவள் முகத்தில் பூசி விட பெண்ணவளுக்கு வந்ததே கோபம் அவன் சட்டை காலரை பிடித்து தன் அருகில் இழுத்து அவன் வெள்ளை சட்டையில் அவள் முகத்தை தேய்த்து அவளின் சந்தனத்தை துடைக்க
“ஏய் விடுடி” என்று அவன் கத்த அதற்க்குள் வெளியே இருந்து யாரோ அறை கதவை தட்ட ராஜதுரை மேலே இருந்த திண்டில் ஏறி அமர்ந்து கொள்ள தாமரை வேகமாக முகத்தை துடைத்து கொண்டு கதவை திறந்தாள்.
அவளின் தாய் தான் வந்திருந்தார் “சீக்கிரமா அடுத்த புடவையை மாத்திட்டு வெளிய வா” என்று கூறிவிட்டு வெளியே செல்ல அவளும் சரியென தலையை ஆட்ட ராஜதுரை மீண்டும் கீழே இறங்கி வந்தவன்
“ஏன் டி உனக்கு என்ன திமிரு இருந்தா அரைக்கா படி மாதிரி இருந்துட்டு என் வெள்ளை சட்டையை அழுக்காக்குவ” என்று கேட்க “நீ மட்டும் என் முகத்துல சந்தனம் பூசலையா” என்று அவள் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி கேட்க அவனால் அவள் கண்ணை பார்க்கவே முடியவில்லை அவளின் மையிட்ட விழிகள் அவனை ஏதோ செய்ய பேசிக் கொண்டே இருக்கும் போதே தன் சட்டையை கழட்டிய ராஜதுரை கையில்லா பனியனுடன் நின்றவுடன் பெண்ணவள் பயத்துடனே திரும்பி நின்று கொண்டாள்.
“ஏய் ஒழுங்கா வெளிய போ இல்லை கத்தி ஊரையே கூட்டிடுவேன்” என்று பெண்ணவள் பயத்துடனே கூற
“ஆமாம் இவள் பெரிய ரதி இவளை பார்த்தவுடனே அப்படியே மயங்குறதுக்கு எனக்கு என் அத்தை மவள் வள்ளி இருக்கா
ஒழுங்கா இந்த சட்டையை துவைச்சு எடுத்துட்டு வர அதுல ஒரு சந்தன கரை கூட இருக்க கூடாது இல்லைன்னு வைய்யி உன் கழுத்தை திருகி தூக்கி போட்டுருவேன்” என்றான் ராஜதுரை அவள் முகத்தில் சட்டையை தூக்கி எறிந்துவிட்டு பெண்ணவள் அவனை பார்த்து முறைத்து கொண்டே நிற்க பின்பக்கமாக வெளியேறினான்.
இது எப்போதும் இருவருக்குள்ளும் நடப்பது தான் எப்போதும் அவனை சீண்டி பார்க்க தாமரைக்கு பிடிக்கும் ராஜதுரையும் அதை பெரிதாக பொருட்படுத்த மாட்டான் முறைப்பெண் அல்லவா.
அத்தியாயம் 3
அடுத்த நாள் காலை வள்ளி வயிற்றுவலி என்று பள்ளிக்கு மட்டம் போட்டு விட அன்று தப்பித்தோம் என்று நினைத்து கொண்டாள் அடுத்து வந்த இரண்டு நாட்களும் வயிற்றுவலி என்று சொல்லியே பள்ளிக்கூடம் பக்கம் எட்டி பார்க்கவில்லை வள்ளி மூன்று நாட்களுக்கு பிறகு நான்காம் நாள் மீண்டும் பள்ளிக்கு வந்தாள் அவளுடன் தாமரையும் வந்தாள் இருவரும் ஒத்தையடி பாதை வழியாக பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டு இருக்க குறுக்கே வந்து நின்றான் ராஜதுரை.
அவனை பார்த்த வள்ளி பயந்து நடுங்க தாமரை தைரியமாக நின்றாள் ராஜதுரை வள்ளியை பார்த்து கொண்டே கையில் தேன் மிட்டாயுடன் வந்தான், தாமரை அவன் கலர் கலர் மைனர் சட்டையை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து வைக்க அவளை முறைத்து கொண்டே வந்தவன் வள்ளி அருகில் சென்றான்.
“வள்ளி உனக்காக தான் தேன் மிட்டாய் வாங்கி வந்தேன் உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்லை” என்று வழிந்து கொண்டே அவளுக்கு கொடுக்க கையை நீட்ட தாமரை அதை வெடுக்கென்று பிடுங்கினாள் அதை தன் வாயில் போட்டு கொள்ள ராஜதுரைக்கு வந்ததே கோபம் அவளை பார்த்து முறைத்து வைக்க “எனக்கும் தேன் மிட்டாய்னா ரொம்ப பிடிக்கும்,
என்ன ராசதுரை கட்டிக்க போற பிள்ளைக்கு பிசுனாரி மாதிரி வெறும் ரெண்டு தேன் மிட்டாய் வாங்கிட்டு வர ஒரு பாக்கெட் நிறைய வாங்கிட்டு வர வேண்டியது தான” என்று கூற “ஏய் நான் உன் கிட்ட எத்தனை வாட்டி டி சொல்லியிருக்கேன் என்னை வா டா போடான்னு சொல்லதன்னு நான் உன்னை விட எத்தனை வயசு பெரியவன் ஒழுங்கா மாமான்னு கூப்பிடு” என்று கோபத்துடனே பேச “போடா லூசு” என்றாள் தாமரை மிட்டாயை மென்று விழுங்கி கொண்டே.
ராஜதுரை அவளை பார்த்து முறைத்து வைத்தவன் அவள் தலையில் நறுக்கென்று கொட்டி விட தாமரை “அம்மா” என்று கத்தியவள் அவன் கையை கெட்டியாக பிடித்து கொண்டாள் “என் கையை விடு டி” என்று அவன் கத்த அவன் இடக்கையில் பற்தடம் பதிய அளவுக்கு நறுக்கென்று கடித்து வைத்தாள் தாமரை அவனோ வலி தாங்க முடியாமல் “ஆஆ என் கையை விடுடி ராட்சஷி” என்று அவன் கத்தி கொண்டு இருக்க அடுத்த கணம் தாமரை வள்ளியின் கையை பிடித்து இழுத்து கொண்டு அங்கிருந்து ஓடியேவிட்டாள்.
“அடியேய் குட்டச்சி பள்ளிக்கூடம் முடிஞ்சு இந்த பக்கமா தான வரனும் அப்போ உன்னை கவனிச்சிக்கிறேன் டி” என்று அவன் கத்த தாமரை சிரித்து கொண்டே அங்கிருந்து ஓடினாள் இருவரும் பள்ளிக்கூடம் வளாகம் வந்து தான் நின்றனர் “பாவம் தாமரை எதுக்கு அவன் கையை கடிச்ச” என்று வள்ளி கேட்க
“அக்கா அவனே ஒரு லூசு நீங்க கிளாஸ்க்கு போங்க” என்றவள் துள்ளளுடன் தன் வகுப்புக்கு சென்றாள் அவளும் பன்னிரெண்டாம் வகுப்பு தான் ஆனால் வேறு வகுப்பறை அவள் சென்று விட வள்ளி பயத்துடனே தன் வகுப்பினுள்ளே நுழைந்தாள்.
அன்று முதல் வகுப்பே சரவணனுடையது தான் ஆனால் அவன் அன்று பள்ளிக்கு வரவில்லை விடுப்பு எடுத்து இருந்தான்
வள்ளிக்கு அப்பாடா என்று இருக்க தன் இருக்கையில் சென்று அமர அவள் பக்கத்தில் அமர்ந்திருந்திருக்கும் ஜோதி பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள் “நம்ம சரவணன் சாருக்கு கல்யாணமாமே உனக்கு தெரியுமா” என்று கேட்க வள்ளியின் முகம் மாறியது பயந்து நடுங்க ஆரம்பித்தாள் “இல்லை எனக்கு தெரியாது” என்றாள் தட்டு தடுமாறி.
“அடுத்த வாரம் அவருக்கு நிச்சயமாம் நிச்சய வேலை இருக்கிறதால தான் பள்ளிக்கூடத்துக்கு வரலையாம்” என்றாள் ஜோதி அவளும் ஒன்றும் தெரியாதவளை போல சரியென்று தலையை ஆட்டி வைத்தாள் மாலை பள்ளி முடிந்து தாமரையும் வள்ளியும் நடந்து வந்தனர்
தாமரை அவளுடன் வளவளவென்று கதை பேசிக் கொண்டு வர வள்ளியின் காதில் எதுவும் விழவில்லை ராஜதுரை வள்ளிக்காகவே மீண்டும் காத்திருந்தான்.
“வள்ளி உன் கிட்ட தனியா பேசனும்” என்று ராஜதுரை தாமரையை பார்த்து கொண்டே கூற தாமரை உடனே வள்ளியின் கையை பிடித்தவள் “நான் அக்காவை விட்டு எங்கயும் போக மாட்டேன்” என்றாள் அவள்
“ஒழுங்கா போறியா இல்லை மரத்துல கட்டி வைச்சு வெளுக்கவா” என்று அவன் பல்லை கடித்து கொண்டே கூற தாமரை அவன் முகத்தை பார்த்து பயந்தேவிட்டாள் அங்கிருந்து சென்றவள் ஒரு மூலையில் ஒளிந்து நின்று இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்தாள்.
“வள்ளி நான்…நான்…” என்று தயங்கியவன் “அடச்சை” என்று தன்னை தானே தலையில் தட்டி சமாளித்து கொண்டவன் “உனக்கே தெரியும் சின்ன வயசுல இருந்து உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு நான் இருக்கும் போது உனக்கு இன்னொருத்தனை கட்டி வைக்க பார்க்குறது நியாயமா சொல்லு எனக்கே தெரியும் உனக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்ன்னு நான் வளவளன்னு பேச வரலை நீ சரி சொன்னா இப்போவே உன்னை எங்கேயாவது கூட்டிட்டு போய் தாலி கட்டிடுவேன் உன் மனசுல என்ன இருக்கும்ன்னு தெரிஞ்சிக்கனும்ன்னுல்ல அதேன் பேச வந்தேன் உனக்கு என்னைய கட்டிக்க சம்மதமா வள்ளி” என்று கொட்டும் அடை மழையை போல படபடவென பேசி முடித்தான் ராஜதுரை.
வள்ளி பயத்துடனே தலைகுனிந்து நின்றிருந்தாள் தயக்கத்துடனே ஆனால் தெளிவாக தன் பதிலை கூற ஆரம்பித்தாள் “மாமா எனக்கும் உங்களை பிடிக்கும் தான் ஆனா என் மனசுல உங்களை கல்யாணம் பண்ணிக்கிற எந்த எண்ணமும் இல்லை எங்க அப்பாவை மீறி என்னால எதுவும் பண்ண முடியாது அம்மா இல்லாம ஒத்த ஆளா இருந்து வளர்த்துருக்காரு அவருக்கு என்னால துரோகம் பண்ண முடியாது” என்றவள் அவன் முகம் பார்க்க முடியாது பயந்து அதற்க்கு மேல் அங்கு நிற்காமல் ஓடி விட.
அவளின் பதிலை கேட்ட ராஜதுரை மனமும் கண்களும் கலங்கியது தன்னந்தனியாக நின்றிருக்க தாமரைக்கு அவனை பார்க்கவே பாவமாக இருந்தது அவளுக்கு முன்பே தெரியும் வள்ளிக்கு ராஜதுரையை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று ஆனால் அதை சொன்னால் அவன் நம்புவானா என்று தான் அவளுக்கு தெரியவில்லை அதனால் தான் இதை பற்றி அவனிடம் அவள் பேசவில்லை.
நாட்களும் நகர்ந்தது நிச்சயத்தன்று காலை அனைவரும் பரபரப்புடனும் மகிழ்ச்சியுடனும் கிளம்பிக் கொண்டு இருக்க வள்ளி ஒருத்தி மட்டும் பயத்துடனே உம்மென்று இருந்தாள்.
அவளின் சொந்தக்கார பெண்மணிகள் அவளை அலங்காரம் செய்து கொண்டு இருக்க “ஏன் டி கல்யாணம் ஆக போறவள் இப்படி உம்முன்னு இருப்பாளா நல்லா கலகலன்னு சிரிக்க வேண்டாமா” என்று கேட்க அவள் எங்கே சிரிப்பது பயத்துடனே தான் கிளம்பினாள்.
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் என்று அனைவரும் கோவிலுக்கு வந்து காத்திருக்க வள்ளியும் கிளம்பி வந்தாள் முதலில் மேடைக்கு வந்தவள் பதட்டத்துடனே நின்றிருந்தாள் அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு இருக்கையில் அமர அடுத்தப்படியாக சரவணனும் அங்கே வந்து சேர்ந்தான் பச்சை நிற காட்டன் சட்டையில் அதற்க்கு ஏற்ற பேன்ட் அணிந்து நடந்து வந்தவன் அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தவன் தன் பக்கத்தில் இருந்த மணப்பெண்ணை அப்போது தான் பார்த்தான் பார்த்த மறுகணம் அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிய வள்ளி பயத்துடனே தலை குனிந்தாள்.
சரவணன் கனவிலும் இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்ப்பார்க்கவில்லை அவன் வகுப்பில் தினமும் அவனிடம் அடி வாங்கும் மக்கு மாணவி ஒருத்தி அவனுக்கே மனைவியாக வருவாள் என்று அவன் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டான் வள்ளிக்கோ அவன் பக்கத்தில் அமர்ந்திருப்பது அடி வயிற்றை பிசைந்தது சரவணன் தன் தாய் தந்தையுடன் பேசுவதற்க்குள் அவர்கள் இருவரும் தாம்பூல தட்டை மாற்றிக் கொள்ள ஐயரும் நிச்சய தேதி குறித்து படிக்க ஆரம்பித்தார்.
அடுத்த மாதம் பத்தாம் தேதி திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது
மணமக்கள் கையில் மாலை எடுத்து வந்து இருவரையும் மாலை மாற்றிக் கொள்ள சொல்ல சரவணன் பெண்ணவளை பார்த்து முறைத்து கொண்டே அவள் கழுத்தில் மாலை அணிவித்தான் வள்ளி அவன் கழுத்தில் மாலை அணிவிக்க போக அவன் தலை குனியாமல் அப்படியே நிமிர்ந்து நின்றிருக்க வள்ளி விட்டாள் அழுது விடுவேன் என்பதை போல நின்றிருக்க போனால் போகிறது என்று தலையை குனிந்தான் சரவணன் வள்ளி பயத்துடனே அவன் கழுத்தில் மாலை அணிவித்தாள்.
அதன் பின் நிச்சய மோதிரம் எடுத்து வர சரவணன் பெண்ணவளின் கையை பிடிக்க அவளின் கைகள் நடுங்கியது அவள் விரலில் நிச்சய மோதிரத்தை அணிவிக்க
வள்ளியும் அவன் கையில் மோதிரத்தை அணிவித்தாள் அவளின் கை நடுக்கத்தை அவனும் உணர தான் செய்தான் நிச்சயம் நல்லபடியாக முடிய மணமக்கள் அனைவரும் வந்து வாழ்த்து கூறி பரிசுகளை கொடுக்க இருவரும் சாப்பிட சென்றனர்.
இருவரும் பக்கத்து பக்கத்தில் அமர்ந்து எதுவும் பேசாமல் சாப்பிட அவர்களின் எதிரே இருந்த புகைப்பட கலைஞர்
“சார் பொண்ணுக்கு சாப்பாடு ஊட்டுங்க” என்று கூற சரவணன் அவனை பார்த்து முறைத்தவன் முறைப்புடனே அவளுக்கு சாப்பாட்டை ஊட்டுவதை போல போஸ் கொடுக்க “அம்மா பொண்ணு நீயும் அவருக்கு சாப்பாடு ஊட்டுமா” என்று அவர் கூற அவளும் பயத்துடனே சரவணனுக்கு சாப்பாடு ஊட்ட இருவரின் புகைப்படமும் படமாக்கப்பட்டது.
அனைத்தும் நல்லபடியாக ஏனோ பெண்ணவளுக்கு சரவணன் தன்னை முறைத்து கொண்டே இருப்பதை போல தோன்றியது ஆம் அவன் அவளை முறைத்து கொண்டே தான் இருந்தான் அவள் அனைத்தும் தெரிந்து திருமணத்துக்கு சம்மதித்து இருக்கிறாள் என்ற கோபம் அவனுக்கு.
சரவணன் குடும்பம் வீடு வந்து சேர சொந்த பந்தங்கள் ஒவ்வொருவராக சொல்லிவிட்டு கிளம்பினர் இரவு அவன் தாய் தந்தை அண்ணன் அண்ணன் மனைவி மட்டுமே அங்கே எஞ்சி இருக்க சரவணன் பேச ஆரம்பித்தான் “அம்மா அப்பா எனக்கு இந்த கல்யாணத்தை விருப்பம் இல்லை
தயவு செஞ்சு கல்யாண வேலையை இத்தோட நிறுத்திடுங்க பொண்ணு வீட்லையும் பேசுங்க” என்று கூற அங்கிருந்த அனைவருக்கும் பேரதிர்ச்சி
“என்ன டா சொல்ற நிச்சயம் பண்ணி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்துருக்கோம் இப்போ வந்து கல்யாணத்தையே நிறுத்த சொல்ற” என்று அவனின் தந்தை கேட்டார்.
2 comments
Saravanan pavam pa
Pls upload daily episodes fast, i m big fan of theeran theera novels.