உயிரின் உவமை நீ 21
அத்தியாயம் 21
அஞ்சலி அங்கேயே கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தாள் ஒருபுறம் ராயனின் ஏக்கம் சுமந்த பார்வை… மறுபுறம் தன் தாயின் இறுக்கமான பிடி….சில நொடிகள் அவளால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை “அஞ்சலி…” என்று ராயன் மீண்டும் அவளை அழைத்தான் அவனது குரலில் இருந்த வலி அப்பட்டமாக தெரிந்தது “நான் பண்ணினது தப்பு தான் டி என்னோட கடந்த காலத்தை உன் கிட்ட சொல்லியிருக்கனும்,” என்று கூறிவிட்டு பேச்சை இடை நிறுத்தியவன் மனம் கலங்கி “இனி நீ தான்னு நான் உனக்காக என் வாழ்க்கையை மாத்திக்கிட்டேன் டி இனி எந்த ஒரு சின்ன விஷயத்தையும் உன் கிட்ட இருந்து மறைக்க மாட்டேன் பிளீஸ் டி என்ன விட்டு போய்டாத சத்தியமா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை” என்று அவன் மனம் கலங்க பேச அவளது மனதை இன்னும் அதிகமாக வலித்ததுஅவள் மெதுவாக அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“மாமா…” என்றவளின் வாரத்தைகள் தடுமாறியது அவளின் நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது அவ்வளவுதான் அவளால் சொல்ல முடிந்தது அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை ராயன் ஒரு அடி அவள் பக்கம் நகர்ந்தான்.
“என்னோட வா அஞ்சலி மா” என்று அவன் கேட்க அவளின் தாயின் பிடி இறுகியது “இன்னுமா டி அவன் சொல்ற கதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்க நீ எங்க பேச்சை கேட்டா உனக்குன்னு நாங்க ரெண்டு பேராவது இருப்போம் நீ அவன் கூட போனா அவன் முதல் பொண்டாட்டி அவனை தேடி வந்துட்டா நீ என்ன பண்ணுவ அவள் உன்னை துரத்தி தான் விடுவா” என்று கூற பெண்ணவளின் கண்கள் கலங்கியது அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதை அவள் மனதால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை தாங்க முடியாத வலி அவள் மனதில் இருந்தது.
அவன் முகத்தை நேராக பார்க்க கூட தயங்கி நின்றாள் “நாங்க இருக்கும் போதே உன்னை கை நீட்டி அடிக்கிறான் நாங்க இல்லைன்னா இன்னும் என்னலாம் பண்ணுவான் நல்லவன் நல்லவன்னு நம்மளை இப்படி ஏமாத்திட்டாங்களே அஞ்சலி” என்று அவள் தாய் கண்ணீர் விட பெண்ணும் ஒரு முடிவுடன் அவனை பார்த்தவள் “வேண்டாம் மாமா நான் உங்க கூட வரல நான் அப்பா அம்மா கூடவே இருந்துக்குறேன்” என்று கூற அடுத்த கணம் ராயனின் முகம் கோபத்தில் சிவந்தது அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து விறுவிறுவென நடந்து செல்ல பெண்ணவள் கண்ணீருடனே அங்கேயே நின்றிருந்தாள்.
வீட்டின் வாசலைத் தாண்டியதும் அவனது நடை இன்னும் வேகமெடுத்தது ஆனால் சில அடிகள் சென்றதும் அவனால் அதற்கு மேல் நடக்க முடியவில்லை அப்படியே நின்றவன், கண்களை மூடி ஒரு பெருமூச்சை வெளியே விட்டான அஞ்சலி தன்னை விட்டுப் போகிறேன் என்று சொன்ன அந்த வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“வேண்டாம் மாமா… நான் உங்க கூட வரல…” என்றவுடன் அவனது தாடை இறுகியது அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது ஆனால் தன் கோபத்தையும் வலியையும் காட்டிவிடக் கூடாது என்று நினைத்தவன் மீண்டும் தன் வீட்டை நோக்கி நடந்தான் வீட்டிற்குள் நுழைந்ததும் சோஃபாவில் வந்து அமர்ந்தான்.
அருள் அங்கே தான் இருந்தான் அவன் அஞ்சலி வீட்டின் உள்ளே செல்வதை பார்த்தவுடன் அங்கேயே அமர்ந்து தன் தமையனுக்காக காத்திருந்தான் தன் அண்ணனின் முகத்தைப் பார்த்தவுடனே ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான் “அண்ணா… அஞ்சலி என்ன சொன்னா” என்று கேட்க ராயன் எதுவும் பேசவில்லை அருள் அவனருகில் வந்து அமர்ந்தான்.
“அண்ணா… உன்னை தான் கேட்க்குறேன் என்ன சொன்னா வரலா எப்போ வரா” என்று கேட்க “அவ வரல” என்றான் இறுகிய முகத்துடன் அவ்வளவுதான் ராயன் கூறினான் அருள் அமைதியாக அவனைப் பார்த்தான் அவன் வாடிய முகத்தை பார்த்தவுடனே அவன் மனம் லலித்தது “அவங்க அம்மா சொல்றதை கேட்டு… என்னை விட்டு கொடுத்துட்டா டா” என்றான் அவனது குரலில் இருந்த வலி அருளுக்குப் புரிந்தது.
“அண்ணா, கொஞ்சம் அவளுக்கு நேரம் கொடு நேத்து நடந்த விஷயம் பெரிய விஷயம் அவள் குழந்தை மாதிரி யார் என்ன சொன்னாலும் அதை காதுல வாங்கிட்டு அதை மாதிரியே நடப்பா அவளுக்கு இன்னும் மனசங்களோட மனசை புரிஞ்சிக்கிற பக்குவம் இல்லை அவளால உடனே எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது அவளுக்கும் வலி இருக்க தான செய்யும் எந்த பொண்ணால தன்னோட புருசன் இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கான்றது தாங்க முடியும் அவள் புரிஞ்சிக்க டைம் கொடு” என்றான் ராயன் தலை நிமிர்த்தி அவனைப் பார்த்தான்.
“நான் அவளுக்கு நேரம் கொடுக்கிறேன் அருள்… ஆனா நான் அவள் கூட இத்தனை நாள் குடும்பம் நடத்தி இருக்கேன் ஒரு நாள் கூடவா நான் அவளை காதலிக்கிறேன்னு அவளுக்கு புரியலை அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு டா இன்னும் அவள் குழந்தையா நீயே சொல்லு” என்று கேட்டான் உண்மையான வருத்தத்துடன்.
“எனக்கு உன் நிலைமை புரியாம இல்லை அண்ணா எல்லாத்துக்கு நேரம் எடுக்கும் அவள் சரியாக நேரம் கொடு” என்று கூறியவன் அவனை ஆறுதல் படுத்த முயற்சித்தான்.
அதே நேரத்தில் எதிர் வீட்டில்…அஞ்சலி தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள் அவளது தாய் வெளியே நின்றபடி, “ஏய் அஞ்சலி… நீ எதையும் நினைச்சு அழாதடி. உனக்கு நாங்க இருக்கோம்” என்று கூறிவிட்டு அவள் பதிலை எதிர்ப்பார்த்து அங்கேயே நிற்க “அம்மா தயவு செஞ்சு என் கிட்ட பேசாத என்னை கொஞ்சம் தனியா விடு” என்று அவள் கத்த அவர் அங்கிருந்து நகர்ந்தார்.
அஞ்சலி கட்டிலில் வந்து அமர்ந்தாள் அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை சற்று நேரம் கழித்து, தன் கண்களைத் துடைத்தவள் அறையைச் சுற்றிப் பார்த்தாள்.
அவளது பார்வை மேசையின் மீது இருந்த ஒரு சிறிய பொருளில் நிலைத்து இருந்தது ன அதை எடுத்துப் பார்த்தவுடன் அவளது கண்கள் கலங்கின அது ராயன் அவளுக்காக வாங்கிக் கொடுத்திருந்த வெள்ளி கொலுசு அதை கையில் வைத்துக் கொண்டவள் மெதுவாகத் அதை தொட்டு தடவிப் பார்த்தாள்.
“மாமா…” என்று அழைத்த அவளது உதடுகள் நடுங்கின “நான் உங்களை விட்டு போகனும்னு நினைக்கல…” என்று கூறியவளின் கண்ணீர் அவளது கன்னத்தில் வழிந்தது “ஆனா… எனக்கு…எனக்கு…என்ன பண்றதுன்னு தெரியல…மாமா” என்றாள் அழுகையுடனே திக்கி திணறி அவள் அந்த கொலுசை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தாள்.
அந்த நேரத்தில் வெளியிலிருந்து அவளது தாய் அழைத்தார் “அஞ்சலி… பொருட்களை எடுத்து வைடி நாம இன்னைக்கு உங்க பாட்டிக்கு வீட்டுக்குப் போறோம்” என்று கூற அஞ்சலி அதிர்ச்சியுடன் கதவை திறந்தாள் “இன்னைக்கா…ஏன் எதுக்கு” என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க “ஆமாம் நாம இப்போ உங்க பாட்டி வீட்டுக்கு போறோம் இங்க இருந்தா மறுபடியும் அவன் வந்து உன்னை குழப்பிவிடுவான் நாம கொஞ்ச நாள் பாட்டி வீட்டிலேயே இருப்போம் இங்க இருக்க பிரச்சனையெல்லாம் முடிஞ்ச பிறகு வருவோம்” என்றார்.
அஞ்சலி பதில் சொல்லவில்லை மாறாக கதவை மீண்டும் மூடியவள் அவள் கையில் இருந்த ராயன் வாங்கி கொடுத்த கொலுசை பார்த்தாள் ஒருபுறம் தாயின் வார்த்தைகள்… மறுபுறம் ராயனின் நினைவுகள்…இறுதியில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அந்த கொலுசை தன் பையில் எடுத்து வைத்தாள் தன் உடமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கும் இங்கிருந்து கிளம்புவது தான் சரியெனப்பட்டது இங்கேயே ராயனை பார்த்து அவனை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்தாள் தன் பையை அவசர அவசரமாக எடுத்து வைத்தவள் உடை மாற்றி கிளம்பி வெளியே வர அவளின் தந்தை காரில் வந்து காத்திருந்தார் அருள் வேலைக்கு கிளம்ப வந்தவன் அஞ்சலி வீட்டின் வெளியே கார் நிற்பதை பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை அவன் சந்தேகத்துடனே பைக்கில் ஏறி அமர வீட்டின் உள்ளே இருந்து அஞ்சலி பையுடன் வெளியே வந்தாள்.
அவளை பார்த்தவுடன் அவனுக்கு சந்தேகமாக இருக்க பைக்கில் இருந்து இறங்கியவன் தயக்கத்துடன் பெண்ணவள் அருகில் வந்தான் “அஞ்சலி எங்க கிளம்பி போற நீ” என்று கேட்க அவள் தாய் அஞ்சலி அருகில் வந்தவர் “அஞ்சலி கார் உள்ள ஏறு” என்று கூற அவளோ தயங்கி தயங்கி அருளை பார்த்து கொண்டே நின்றிருந்தாள் “அஞ்சலி நான் உன் கிட்ட தான் கேட்க்குறேன் நீ பதில் சொல்லு” என்று அவன் சற்று கடினமான குரலில் கேட்க “நான் பாட்டி வீட்டுக்கு போறேன் மாமா” என்றாள் அவனை பார்த்து “போதுமா பா நீ போ நாங்க கிளம்பனும் நேரமாச்சு” என்று அவர் கூற.
அருள் அவரை பார்த்து முறைத்தவன் “அஞ்சலி நீ எங்க பேச்சை கேட்டு உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத அவங்க காலம் முழுக்க உன் கூட இருக்க போறது இல்லை” என்று கூற அஞ்சலியின் தந்தைக்கு கோபம் வந்தது “ஏன் பா உனக்கு என்ன பிரச்சனை என் பொண்ணை நிம்மதியாவே இருக்க விட மாட்டிங்களா நீயும் உங்க அண்ணனும்” என்று கத்த அருள் அவரை பார்த்து முறைத்து வைக்க அதற்க்குள் அஞ்சலியை காரில் அமர வைத்தார் அவளின் தாய் அருளால் அதற்க்கு மேல் அவளிடம் எதுவும் பேச முடியவில்லை பெண்ணவள் காரில் ஏறியவுடன் அவளின் தந்தை காரில் அமர்ந்து காரை ஓட்ட அஞ்சலியின் கண்கள் ராயன் வீட்டை நோக்கி சென்றது பெண்ணவள் தன்னவன் கண்ணுக்கு தெரிந்து விட மாட்டானா என்று பார்த்து கொண்டே செல்ல அருள் கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்து கொண்டே இருந்தான்.
அஞ்சலியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது அவள் அழுது கொண்டே வர அவளின் தாய் எரிச்சலடைந்தார் “இன்னும் எவ்வளவு நாளைக்கு அழுதுட்டே இருப்ப கொஞ்சமாவது தைரியமா இருக்க மாட்டியா” என்று கத்த பெண்ணவள் அவரை கண்டு கொள்ளாதவளை ஜன்னல் பக்கம் திரும்பி வேறு எங்கோ பார்த்து கொண்டே வந்தாள் வரும் வழியெங்கும் அவள் தாய் அவளை திட்டிக் கொண்டே வர அவள் காதில் எதுவும் விழவில்லை ராயனின்
நினைவாகவே இருந்தது.
1 comment
Anjali ennadi panna pora