உயிரின் உவமை நீ 3

அத்தியாயம் 3

 

ராயன் பேசிவிட்டு சென்ற பிறகு அனைவரும் மீண்டும் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர் அஞ்சலி மட்டும் செல்வியின் அருகிலேயே அமைதியாக நின்றிருந்தாள் இருப்பினும் சிறிது நேரத்திற்கு முன் நடந்த சம்பவம் இன்னும் அவள் மனதை விட்டு அகலவில்லை அதனால் அவளின் முகம் வாடி இருந்தது எல்லோரும் இருந்தும் தனிமையை உணர்ந்தாள் எப்போது தன் வீட்டுக்கு செல்வோம் என்று இருந்தது அவள் மனநிலை.

 

அப்போது கோவிலின் பக்கத்தில் இருந்த பெரிய ஆலமரத்தில் இருந்து குரங்கு ஒன்று கீழே குதித்தது அங்கிருந்த பழங்களில் ஒன்றை எடுத்து கொண்டு ஓட அனைவரும் விரட்டினர் அங்கிருந்த பெண்களில் சிலர் சிரித்துக்கொண்டு, “பழம் எடுத்துட்டு ஓடுது பாருங்களேன்” என்று பேசிக்கொண்டே இருந்தனர்.

 

ஆனால் அஞ்சலிக்கோ குரங்கைப் பார்த்ததும் அவள் உடல் நடுங்கியது “அத்தை…” என்று பயந்து செல்வியைத் தேடினாள்

செல்வி அப்போது பொங்கலை இறக்குவதில் மும்முரமாக இருந்ததால் அவளை கவனிக்கவில்லை.

 

அதே நேரம் அந்த குரங்கு கையில் இருந்த பழத்தை கடித்துக்கொண்டே அவள் நின்றிருந்த பக்கம் வந்தது அதைப் பார்த்த அஞ்சலி பயத்தில் மேலும் பின்னோக்கி நகர்ந்தாள் அந்த குரங்கு மீண்டும் அவளை நோக்கி நடக்க “அம்மா…” என்று பயத்தில் நடுங்கிய அஞ்சலி கதறியவள் யோசிக்காமல் அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள் அவள் ஓடி வரும் போது அவளின் குறுக்கே நின்றிருந்த ராயனின் மீது வேகமாக வந்து மோதியவள் அவனை கையை இறுக்கமாக பிடித்து கொண்டு அவன் பின்னால் ஓடி சென்று, அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே நின்று கொண்டாள்.

 

திடீரென அவள் கை பட்டதும் ராயன் திரும்பிப் பார்த்தான் அவளோ பயத்தில் கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்தாள்

“என்னாச்சு?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான்”கு… கு…குரங்கு…” என்று நடுங்கிய குரலில் சொல்லி, இன்னும் அவன் கையை விடாமல் பிடித்துக் கொண்டே தான் இருந்தாள்

ராயன் ஒரு கணம் அந்த குரங்கைப் பார்த்துவிட்டு, மீண்டும் அவளைப் பார்த்தான் 

அவன் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.

 

“அது ஒண்ணும் பண்ணாது… சும்மா சாப்பாடு எதாவது இருக்கான்னு தேடி வந்திருக்கு பயப்படாத” என்று மெதுவாகச் சொன்னவன், அவள் பிடித்திருந்த கையின் மேல் அவன் கையை வைத்து பாதுகாப்பாக அவளை பிடித்து கொண்டு அவர்களை நோக்கி வந்த குரங்கை விரட்டியடித்தான்

“நான் இருக்கேன் பாப்பா.. ஒண்ணும் ஆகாது” என்று அவன் கூற அந்த ஒற்றை வார்த்தையில் அஞ்சலியின் பயம் கொஞ்சமே கொஞ்சம் குறைத்தது.

 

மெதுவாகக் கண்களைத் திறந்தவள், இன்னும் அவன் கையைத்தான் பிடித்திருப்பதை உணர்ந்ததும் சட்டென்று கையை விட்டுவிட்டு இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள்

தலைகுனிந்து நின்றவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருந்தன தன் வாழ்வில் முதல் முறையாக வெட்கத்தை உணர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் அந்த குழந்தை மனம் கொண்ட குமரிக்கே அது தெரியவில்லை அவளைப் பார்த்த ராயன்,

“சரியான பயந்தாங்கொளி…” என்றவன் அவளை பார்த்து சிரித்தபடியே அங்கிருந்து நடந்துசென்றான்.

 

அவனுக்கோ அது சாதாரணமான ஒரு வார்த்தையாக தான் தோன்றியது

ஆனால் அஞ்சலிக்கோ…

அவன் முதல் முறையாக தன்னை திட்டாமல், சிரித்தபடி பேசியிருக்கிறான் என்பதே ஆச்சரியமாக இருந்தது அவன் சிரித்த முகம் மட்டும் அவள் மனதை விட்டு அகலவே இல்லை ஏனோ அந்த சிரிப்பை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல தோன்றியது அது ஏன் என்ற காரணம் மட்டும் அவளுக்கே தெரியவில்லை.

 

ஒரு வழியாக கிடா வெட்டி பந்தி போட அனைவரும் சாப்பிட அமர்ந்தனர் அஞ்சலி தனக்கு அருகில் இருந்த இடம் காலியாக இருக்க அமைதியாக அமர்ந்திருந்தாள் ராயன் வந்து அங்கே அமர்வான் என்று ஏனோ அவள் மனம் எதிர்பார்த்தது ஆனால் அவனோ அவளை ஒரு பார்வை கூட பார்க்காமல் எதிரே இருந்த இடத்தில் அமர்ந்து பக்கத்தில் இருந்தவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான் அவளுக்கோ ஏதோ சொல்ல முடியாத ஏமாற்றம் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

 

இப்படியாக நாட்களும் நகர்ந்தது ராயனுக்கு பெண் பார்க்கும் படலம் மிகவும் தீவிரமாக ஆரம்பித்தது கிடா வெட்டு முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு அஞ்சலி செல்வியுடன் அமர்ந்து அவருக்கு காய்கறிகள் நறுக்கி கொண்டு இருக்க அவளின் தாய் சகுந்தலாவும் அங்கே தான் இருந்தார் செல்வியும் சகுந்தலாவும் ஊர் கதைகள் பேசிக் கொண்டு இருக்க “ஆமாம் அக்கா ராயனுக்கு ஏதோ வரன் அமைஞ்சிருக்குன்னு சொன்னிங்களே என்னாச்சு” என்று சகுந்தலா செல்வியிடம் கேட்க.

 

“நல்ல வரன் சகுந்தலா இது முடிஞ்சிட்டா போதும் ஞாயிற்று கிழமை பொண்ணு பார்க்க போறோம் இன்னொரு வீட்டு வேலையும் முடிஞ்சிருச்சு அவனுக்கு கல்யாணம் பண்ணிட்டா அவனையும் அவன் பொண்டாட்டியும் அந்த வீட்டுக்கு அனுப்பிட்டு நானும் சின்னவனும் இங்கேயே இருந்துப்போம்” என்று கூற அந்த வார்த்தை அஞ்சலியின் மனதில் ஏதோ ஒன்றை உடைத்தது ஏன் என்று புரியவில்லை… ஆனால் அவள் முகத்தில் இருந்த புன்னகை மெல்ல மறைந்து போனது.

 

அஞ்சிலி செல்வியிடம் “அப்போ ராயன் மாமா இனி இங்க இருக்க மாட்டாரா அத்தை?” என்று‌ கேட்க செல்வி பதிலுக்கு சிரித்து கொண்டே 

“அவனுக்கு கல்யாணம் ஆனா அவன் ஏன் இங்க இருக்க போறான் தனிக்குடித்தனம் போகனுமே டி அவனும் அவன் பொண்டாட்டியும் தனியா தான் இருப்பாங்க.”” என்று கூற அஞ்சலியின் முகம் உடனே வாடியது.

 

“அப்போ மாமா இங்க வரவே மாட்டாரா” என்று கேட்க “வருவான் எப்போவது அவன் பொண்டாட்டி கூட” என்றார் செல்வி அதன் அஞ்சலி எதுவும் பேசாமல் வாடிய முகத்துடனே தன் வீட்டுக்கு சென்றாள் ஏனோ அவள் மனம் வலிக்க ஆரம்பித்தது.

 

அன்று இரவு எப்போதும் போல ராயன் வேலை முடித்து வர அவன் கார் சத்தம் கேட்டவுடனே அஞ்சலி ஜன்னல் வழியாக வந்து அவனை பார்த்தாள் உடனே அவளுக்கு அவன் தன்னிடம் பேசியது அழகாக வரிசை பற்கள் தெரிய சிரித்தது அவன் பாப்பா என்ற அழைப்பை அனைத்தும் நினைவுக்கு வந்தது ‘ராயன் மாமா வேற வீட்டுக்கு போயிட்டா… தினமும் அவரை பார்க்க முடியாதா… அப்போ செல்வி அத்தை வீட்டுக்கு போனாலும் அவர் இருக்க மாட்டாரா…’ என்று நினைத்தவளின் மனம் காரணம் தெரியாமல் கனத்தது கண்களில் தானாகவே நீர் கோர்த்தது அது ஏன் என்று அவளுக்கே புரியவில்லை இரவெல்லாம் சுத்தமாக உறங்கவேயில்லை அவள் எதிரே இருந்த புகைப்படத்தை மட்டும் பார்த்து கொண்டே படுத்திருந்தாள் அதே நினைவுடன் அவள் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்க.

 

அந்த வார இறுதி நாளான செல்வி சொன்ன ஞாயிற்று கிழமையும் வந்தது செல்வி வீட்டில் இருந்து அனைவரும் கிளம்பி வர இறுதியாக ராயன் ஆறடி உயரத்தில் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக நடந்து வந்தான் 

அஞ்சலி அவனை இன்று தான் முதல் முறையாக வேட்டி சட்டையில் பார்க்கிறாள் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தவள் இதையெல்லாம் கவனித்தாள் அவளுடன் அவள் தாய் சகுந்தலாவும் இருந்தார் “அம்மா ராயன் மாமா எங்க போறாரு” என்று அஞ்சலி தன் தாயிடம் கேட்க.

 

“எல்லாரும் ராயனுக்கு பொண்ணு பார்க்க பக்கத்து ஊருக்கு போறாங்க டி” என்று சகுந்தலா வெகு சாதாரணமாக சொல்ல அஞ்சலிக்கோ இதயம் படபடத்தது ஏனோ மனம் வலித்தது அவளின் கண்கள் ராயனை விட்டு இம்மி அளவு கூட அகலவேயில்லை அனைவரும் காரில் ஏறிக் கொள்ள கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்தாள் அவள் தாய் வேலை இருப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றுவிட அஞ்சலி குடுகுடுவென வீட்டின் உள்ளே ஓடியவள் பூஜை அறைக்குள் சென்று கடவுள் படத்தை பார்த்து இரு கையை கூப்பியவள் ‘சாமி… ராயன் மாமா எங்கயும் போகவே கூடாது… எப்பவும் எங்க எதிர் வீட்டுலயே இருக்கனும்… ப்ளீஸ் சாமி…’ என்று பச்சப்பிள்ளைய போல மனதில் வேண்டிக் கொண்டாள் அவள் எதனால் அப்படி வேண்டிக் கொண்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

 

அவள் வேண்டிய அந்த ஒரு பிரார்த்தனை… இன்னும் சில நாட்களில் அவள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப் போகிறது என்பதை அப்போது அஞ்சலி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

அதன் பின் அஞ்சலி பத்து நிமிடத்திற்க்கு ஒரு முறை வாசலை வந்து எட்டி பார்த்து கொண்டே இருந்தாள் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்க்காக காத்திருக்கும் பிள்ளையை போல ஆனது அவளின் மனநிலை நகத்தை பற்களால் கடித்து கொண்டே பதட்டத்துடனே காத்திருந்தாள்.

 

சகுந்தலா உள்ளே இருந்து “அஞ்சலி அஞ்சலி அடியேய் அஞ்சலி” என்று அழைக்க வாசலிலேயே அமர்ந்திருந்தவளுக்கு அவள் தாயின் குரல் விழுந்த பாடில்லை அவளின் தாய் கோபத்துடனே கையில் கரண்டியுடன் வந்தவர் அவள் கையில் அடி போட அவள் சுயநினைவுக்கு வந்தாள் “என்ன மா” என்று அவள் கேட்க “வந்து கொட்டிக்க டி” என்று சாப்பிட அழைக்க சாப்பிட அமர்ந்தவள் பாதி சாப்பிட்டிலேயே எழுந்து கொண்டாள்‌‌ எப்போதும் நன்றாக சாப்பாட்டை வெளுத்து வாங்குபவளுக்கு இன்று சாப்பிடவே பிடிக்கவில்லை.

 

நேரம் தான் ஓடிக் கொண்டிருந்ததே தவிர மாலை ஆகியும் யாரும் வந்த பாடில்லை 

இறுதியாக கார் சத்தம் கேட்க வெளியே ஓடோடி வந்தாள் அஞ்சலி ஒவ்வொருவராக காரில் இருந்து இறங்க அவர்களின் முகத்தை பார்த்து அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை செல்வி கதவை திறந்து உள்ளே செல்ல ராயன் தன் அறைக்கு சென்றான் அருள் வேலை விஷயமாக வெளியே கிளம்பினான்.

 

அஞ்சலி மெதுவாக சத்தம் இல்லாமல் செல்வி வீட்டுக்குள் நுழைந்தாள் செல்வி சமையலறையில் காபி போட்டுக் கொண்டிருந்தார் இவளோ சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருப்பது போல நடித்தாள் அவள் காதுகள் மட்டும் அவர்களின் பேச்சுக்காகக் காத்திருந்தன.

 

யாராவது எதாவது பேசுவார்கள் என்று நினைத்து கொண்டு இருக்க யாரும் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை 

‘பொண்ணு பிடிச்சிருச்சா…? இல்லையா…? ஏன் யாருமே எதுவும் பேச மாட்டேங்குறாங்க…?’ என்று மனம் முழுக்க பல கேள்விகளோடு அமர்ந்திருந்தாள்.

 

அப்போது சமையலறையில் இருந்து செல்வியின் குரல் கேட்டது…

“ராயா… பொண்ணு வீட்டுல இருந்து போன் வந்திருக்கு…” என்று கூ

ற பெண்ணவள் செவிகளை கூர்மையாக்கி கொண்டு காத்திருந்தாள்.

 

 

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *