அசுரனின் மோகினியே – 3
அசுரனின் மோகினியே – 3
திருமண மண்டபத்தில் முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணமேடையில் மணமகன் சூர்யா, ஐயர் கூறும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சு, பொண்ணை வரச் சொல்லுங்க!” என்று ஐயர் சப்தமிட்டதும்
மீனாட்சி, பொண்ணை அழைத்து வர சென்றவர்,” மோகனா ரெடியாகிட்டியா?” என்று கேட்டுக்கொண்டே அவளது அறைக்கதவை திறந்தார். அங்கே மகள் இல்லையென்றதும் அவருக்குப் பக்கென்றது. “மோகனா, எங்க இருக்க?” என்று குரல் கொடுத்தவாறே குளியலறைக் கதவைத் திறந்து பார்த்தார். அவள் அங்கேயும் இல்லையென்றதும் அவருக்குப் பயம் பிடித்துக்கொண்டது.
மகளுக்கு இந்தக் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது அவருக்குத் தெரியும்தானே! ‘படிக்கப் போறேன்னு சொன்ன பொண்ணை, இந்த கல்யாணம் நடந்து தான் ஆகணும்னு அவ விரும்பத்தை மதிக்காம அடம்பிச்சாரே இந்த பாவி மனுஷன்? இப்போ என் பொண்ணு எங்க போனாளோ?’ என்று புலம்பியபடியே, அங்கே இருந்த அறைகளிலெல்லாம் தேடிப் பார்த்தார்.
“பொண்ணை வரச் சொல்லுங்க” என்று ஐயர் மீண்டும் குரல் கொடுக்க
ராஜசேகரனோ, ‘இன்னுமா அலங்காரம் முடியலை?’ என்று நினைத்தவர், கமலாவைப் பார்த்து, “நீ போய் மோகனாவைச் சீக்கிரம் வரச் சொல்லு” என்றார்.
கமலாம்பிகை மோகனாவின் அறைக்குச் செல்ல, அவருக்கு எதிரே கண்ணீருடன் நின்றுகொண்டிருந்த மீனாட்சி கமலாவைக் கண்டவுடன், “மோகனாவைக் காணோம் கமலா” என்று அழ ஆரம்பித்தார்.
கமலவோ, “அண்ணி, இங்க எங்கேயாவது இருப்பா, பார்க்கலாம், அழாதீங்க” என்று கூறியபடியே ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தார் . அவள் அங்கே இருந்தால் தானே!
வெகுநேரம் ஆகியும் மூவரும் வராததால் ராஜசேகரனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவரும் மோகனாவின் அறைக்கு ஓடிவந்தார். மகள் மீது அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவள் தன்னை மீறி எதுவும் முடிவு எடுக்கமாட்டாள் என்ற மலையளவு நம்பிக்கை இருந்தது
அங்கே அழுது கொண்டிருந்த மீனாட்சியைப் பார்த்ததும், “என்ன ஆச்சு? மோகனா எங்கே? ரெண்டு பேரும் இங்கே என்ன பண்றீங்க கமலா? நீ ஏன் அழற மீனாட்சி ?” என்று கேட்டார் ராஜசேகரன்.
“மோகனாவைக் காணோம் அண்ணா! மண்டபத்துல எல்லா அறையிலயும் தேடிட்டோம், எங்கேயும் காணோம் !” என்றார் கமலம் கவலையாக.
அந்தப் பதிலைக் கேட்டதும் ராஜசேகரனோ “என்ன சொல்றீங்க? மோகனாவைக் காணோமா?” என்றார் பதட்டமாக
ராஜசேகரன் மனம் பதைபதைப்புடன் மணமகள் அறைக்குச் சென்று பார்த்தவர், மகள் அங்கே இல்லையென்றதும் தன் தொழில் எதிரிகள் யாராவது மகளைக் கடத்தி இருப்பார்களோ என்று சந்தேகம் கொண்டார்.
“ஐயோ, என் பொண்ணு எங்க போனாளோ? இந்த கல்யாணம் வேணாம், நான் படிக்கிறேன்னு சொன்னாத்தானே உங்ககிட்ட!” என்று ராஜசேகரனிடம் முறையிட்டுக் கதறினாள் மீனாட்சி.
அவரோ, “சும்மா அழாதே மீனாட்சி! என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ என்னை ஏமாத்த மாட்டா” என்றவாறே போனில் மோகனாவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்.
மோகனாவின் எண்ணிற்கு அழைத்துப் பார்க்க, அவளது போன் அறைக்குள் தான் ஒலித்தது.
“என் பொண்ணு எங்கே போயிருப்பா?” என்று அவர் கண்களும் கலங்கியது.
‘இல்லை! மோகனா கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னாளே?’ என்ற நம்பிக்கையுடன் மீண்டும் மண்டபம் முழுவதும் தேடுவதற்குத் தன் ஆட்களை அனுப்பினார்.
மணமேடையில் அமர்ந்திருந்த சூர்யாவுக்கும் மோகனாவைக் காணவில்லை என்ற செய்தி எட்டியதும் . பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்த ராஜசேகரன் அருகில் வந்தவன், “என்ன மாமா, மோகனா எங்க போனா? அவகிட்ட கேட்டுத்தானே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினீங்க?” என்று கேட்டான்.
ராஜசேகரனோ, “அவ கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னா மாப்பிள்ளை! என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா. யாரோ என்னோட தொழில் எதிரிகள் இப்படிப் பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன். நம்ம ஆட்களைவிட்டுத் தேடச் சொல்லியிருக்கேன், கொஞ்ச நேரத்துல வந்துடுவா!” என்றார்.
“மோகனாவுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருந்துச்சுல்ல மாமா? என் கிட்ட எதையும் மறைக்காதீங்க?” என்று சூர்யா மீண்டும் கேட்க
அவனை நிமிர்ந்து பார்த்த ராஜசேகரன், “மோகனாவுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் தான் மாப்பிள்ளை. அவ என்கிட்ட சம்மதம் சொல்லிதான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணினேன்” என்றார் உறுதியாக.
ஆனால், தன்னுடைய பிடிவாதத்தால் அவளுடைய விருப்பத்தைப் புறக்கணித்துவிட்டோமா என்ற கேள்விகள் ராஜசேகரனின் மனதைத் தோட்டாவாகத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது.
“மாமா, நானும் என்னோட ஆளுங்களை வச்சுத் தேடச் சொல்லட்டுமா?” என்று போனை எடுத்த சூர்யாவை
“வேண்டாம் சூர்யா, நான் பார்த்துக்கிறேன்.” என்று தடுத்தார் ராஜசேகரன்.
அதற்குள் மோகனாவைக் காணவில்லை என்ற செய்தி மண்டபம் முழுவதும் பரவத் தொடங்கியது. உறவினர்கள் ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பித்தனர்.
தன்னுடைய குடும்பத்தின் கவுரவத்துக்காக எப்போதும் கவனமாக இருக்கும் ராஜசேகரனுக்கு, இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மகளைக் காணவில்லை என்ற கவலையை விட, அவளுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற பயம் அவரை வாட்டியது.
சூர்யாவின் அப்பாவான மாணிக்கமோ ராஜசேகரனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். சூர்யாவின் தாயோ, “கவலைப்படாதே மீனாட்சி, மோகனாவுக்கு எதுவும் ஆகியிருக்காது, கண்டுபிடிச்சுருவாங்க. மோகனாதான் என் வீட்டு மருமகள், அது என்னைக்கும் மாறாது” என்று மீனாட்சியைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
கமலாவிடம் சொந்தக்காரப் பெண்மணி ஒருவர் வந்து நின்று, “உன் பையனுக்குப் பொண்ணைக் கொடுத்திருக்கலாம். இப்போ பணம் இருக்குன்னு உன் மகனுக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னவன்ல… இப்போ பார்த்துப்பாரு என்ன ஆச்சுன்னு!” என்றார் மெதுவாக
கமலாவோ , “இப்படிப் பேசாதீங்க சித்தி! நானே என் மருமக மோகனாவைக் காணோமே, அவளுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு கவலையில இருக்கேன். நீங்க வேற” என்றார்.
“ஏன், உன் மகன் போலீஸ் தானே? அவனைக் கண்டுபிடிக்கச் சொல்லு” என்று அந்தப் பெண்மணி சொல்ல..
‘என் மகனை அண்ணாவுக்குப் பிடிக்காது சித்தி. அவனுக்கும் அண்ணாவுக்கும் ஆகாது’ என்று பெருமூச்சு விட்டார் கமலா.
ஆனால் அடுத்த நொடியே, ‘ஆதித்யன் நேத்து ராத்திரியிலிருந்து என்கிட்ட சரியா பேசலையே! ஒருவேளை அவன் மோகனாவைக் கடத்தி இருப்பானோ?’ என்ற எண்ணம் தோன்றியது கமலாவிற்கு. அந்த எண்ணத்தை உடனடியாகக் கலைத்துவிட்டவர்..
‘ச்சே சே! அப்படியெல்லாம் இருக்காது . என் மகன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான். அவன் கோபக்காரன் தான், ஆனா ஒரு பொண்ணைக் கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு அவன் தரம் இறங்க மாட்டான்!’ என்று தன் மகன் மீதிருந்த நம்பிக்கையால் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார்.
இருப்பினும், மோகனாவைக் காணவில்லை என்ற செய்தி அவருடைய மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
‘ஒருவேளை மோகனா எங்கேயாவது போயிட்டாளா? அவளுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லையோ?’ என்று எதுவுமே புரியாமல் தவித்தார்.
அண்ணனின் முகத்தில் தேங்கிய கவலையைப் பார்த்த கமலாம்பாளின் மனம் வேதனையில் சுருங்கியது.
அவர் தன்னை முன்பு அவமானப்படுத்தியிருந்தாலும், இப்போது அவருடைய குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கும் நிலையைப் பார்த்து மனம் வருந்தினார்.
“ஐயோ! என் அண்ணன் இப்போ எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிக்கிறாரே! பொண்ணைக் காணோம்னு ஊரே பேச ஆரம்பிச்சுடுச்சே! நா என்ன பண்ணுவேன் கடவுளே!” என்று கண் கலங்கினார்.
அதே நேரத்தில், கடந்த கால நிகழ்வுகளும் அவர் நினைவுக்கு வந்தன. தன்னுடைய மகனுக்காக மோகனாவைப் பெண் கேட்டு சென்ற போது, அன்று ராஜசேகரன் தன்னை அவமானப்படுத்திய வார்த்தைகள் அவர் மனதை வலிக்கச் செய்தன.
‘அப்பவே என் மகனுக்கு மோகனாவைக் கட்டிக் கொடுத்திருந்தா, இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா?’ என்ற எண்ணம் தோன்றியதும் தன்னைத்தானே நொந்துகொண்டார். தேமே என்று முகத்தை வைத்து நின்றிருந்தவர்,
‘இப்போ அதையெல்லாம் நினைச்சு என்ன பிரயோஜனம்? என் அண்ணனுக்கு ஒரு பிரச்சினைன்னா, நான் அவருக்குத் துணையா இருக்கணும்.’என்று தோன்ற தன் அண்ணனின் அருகில் சென்றவர்..
“அண்ணா, கவலைப்படாதீங்க. மோகனா இங்கதான் எங்கேயாவது இருப்பா, கண்டுபிடிச்சிடலாம்!” என்று ஆறுதல் கூறினார். ராஜசேகரன் எதுவும் பேசாமல் தலையசைத்தார்.
நேரம் கடந்து கொண்டிருந்தது.
திருமணத்துக்காக வந்திருந்த உறவினர்கள் ஒவ்வொருவராகக் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். மண்டபத்தின் அலங்காரங்கள் அப்படியே இருந்தாலும், அங்கே இருக்க வேண்டிய திருமணக் களைப்பு மட்டும் காணாமல் போயிருந்தது.
மீனாட்சி அழுதுகொண்டே இருந்தார்.
“என் பொண்ணு எங்கே போனாளோ? அவளுக்கு என்ன ஆச்சோ? நான் அவளைப் பார்க்காம இருக்க முடியாதுங்க!” என்று கதறினார்.
ராஜசேகரனோ “அழாதே மீனாட்சி, நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகியிருக்காது. அவளை எப்படியாவது கண்டுபிடிச்சிடுவோம்!” என்று ஆறுதல் கூறினார். ஆனால், அவருடைய குரலிலும் முன்பிருந்த உறுதி இல்லை.
மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும் ஆட்கள் தேடினார்கள் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அன்று இரவு ஆகியும் மோகனாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ராஜசேகரன் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்திருக்க, மீனாட்சியோ அவருக்கு அருகில் கண்ணீரில் மூழ்கிக் கிடந்தார்.
மண்டபத்தில் எல்லோரும் மோகனாவைத் தேடிக்கொண்டிருக்க, அவளோ அரைகுறை ஆடையில் ஆதித்யனின் அணைப்பில் கிடந்தாள்.